களைகட்டிய பிரபல நடிகை திருமணம்.. பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!

 
Karthika Nair

நடிகை கார்த்திகா நாயர் திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யாராஜ், பிரபு, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் கார்த்தி நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான ராதா டிக் டிக் டிக், எங்கேயோ கேட்ட குரல், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Karthika Nair

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்தார் கார்த்திகா நாயர். அம்மாவை போலவே தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். அன்னக்கொடி, புறம்போக்கு எனும் பொது உடைமை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவரது தங்கை துளசியும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகமானார். ஆனால், தொடர்ந்து பெரிதாக திரைத்துறையில் நீடிக்கவில்லை.

இந்நிலையில், கார்த்திகா நாயர் ரோகித் மேனன் என்பவரை கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உதய் சமுத்ரா பீச் ஹோட்டலில் பிரம்மாண்டமாக இன்று நடத்தி உள்ளனர். நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், இன்று நடைபெற்ற திருமண நிகழ்விலும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

Karthika Nair

ராதா மகளின் திருமணத்தில் டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவி முதல் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை ராதிகா சரத்குமார், இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா, ராதாவின் சகோதரி அம்பிகா, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

From around the web