என்னை யாரும் சீண்டி பார்க்காதீங்க.. செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய நடிகை குஷ்பு!

 
Khusbhu

என்னை சீண்டி பார்க்காதீங்க.. திமுக பேச்சாளருக்கு நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். திமுகவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக அறிவித்தது. அது போல் திமுக பொதுக் கூட்ட மேடைகளிலும் அவர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னித்து கட்சியில் இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறும் கட்சித் தலைமைக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து 5 மாதங்கள் கழித்து கடும் எச்சரிக்கையுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த மே மாதம் 17 ஆம் தேதி திமுகவில் சேர்க்கப்பட்டார்.

Khusbhu

இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் இன்று குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாக பேசும் போது அவர்களை அந்த பெண்ணை ஒரு மகளாகவோ மருமகளாகவோ தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காக பேசவில்லை, என் மகள்களுக்காகவும் மற்ற பெண்களுக்காகவும் பேசுகிறேன். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. இது போன்ற ஆட்களைத்தான் திமுகவில் தீனி போட்டு வளர்க்கிறார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மொழியிலேயே என்னால் பேச முடியும். ஆனால் நான் அப்படி செய்தால் என் வளர்ப்பு தவறாகிவிடும். என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என கோபமாக கொந்தளித்த குஷ்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.

குஷ்பு மீது அவதூறு பேசிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். ஏற்கெனவே நயன்தாரா குறித்து அசிங்கமாக பேசிய ராதாரவி நீக்கப்பட்ட நிலையில் தற்போது குஷ்பு குறித்து அவதூறு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் நீக்கப்பட்டுள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு நன்றி கூறியுள்ளார்.

From around the web