குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.. விபத்தில் சிக்கிய பிரபல பாடகி பகிர்வு!

 
chinmayi

பிரபல பாடகி சின்மயி காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான ‘கன்னத்தில் முத்தமின்னால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு ஏராளமான தமிழ் பாடல்களை பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் தமன்னா, சமீரா ரெட்டி, சமந்தா, திரிஷா உளளிட்டோருக்கு டப்பிங் பேசியுள்ளார். திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு டப்பிங் பேசியிருந்தார். இதையடுத்து தெலுங்கில் அதே படத்திற்கு சமந்தாவுக்கும் இந்தியில் எமி ஜாக்சனுக்கும் பேசியிருந்தார். சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதை பெற்றுள்ளார்.

chinmayi

இவர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருவர் உள்ளனர். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு கொண்டு வருபவர். அதுபோல் பத்ம சேஷாத்ரி, கேளம்பாக்கம் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வக்கிரங்களையும் தோலுரித்து காட்டியவர்.

இந்நிலையில், நேற்று தான் சாலை விபத்தில் சிக்கியதாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ ஓட்டுநர் தப்பித்தும் சென்றுள்ளார். 


இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.

From around the web