ரூ.25 கோடி அபராதம் செலுத்தினேனா..? வரம்பு மீறிய செயல்... கொந்தளித்த நடிகர் பிரித்விராஜ்..!
தன் மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
2002-ல் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2005-ல் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மலையாள யூடியூப் சேனல் ஒன்று நடிகர் பிரித்விராஜூக்கு எதிராக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் பிரித்விராஜ் பிரச்சாரப் படங்களை எடுக்க அவருக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முறைகேடாக பணம் வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணை அம்பலமாகியதால் மத்திய அமலாக்கத்துறைக்கு நடிகர் பிரித்விராஜ் ரூ.25 கோடி அபராதத்தை செலுத்தியதாகவும், அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த யூடியூப் சேனல் குறிப்பிட்டுள்ளது.
பிரித்விராஜ் மட்டுமல்லாமல் பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கொண்டுவரப்பட்டு அவை மலையாள சினிமா மூலம் புழக்கத்தில் விடப்படுவதாக ‘The Marunadan Malayali’ என்ற யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நடிகர் பிரித்விராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பொதுவான ‘அறம் சார்ந்த இதழியல்’ என்ற வார்த்தையை புறக்கணிக்க முயற்சிக்கிறேன். காரணம் அது தேவையற்றதாகிவிட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ‘செய்தி’ என்ற பெயரில் பொய்யை பரப்புவதற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த பிரச்சினை எந்த அளவிற்கு செல்லும் என்பதை பார்க்கபோகிறேன். சம்பந்தபட்ட யூடியூப் சேனல் மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்யப்போகிறேன். பின் குறிப்பு, நான் யாரிடமும் எதற்காகவும் அபராதம் செலுத்தவில்லை என்பதை இன்னும் இந்த செய்தியை கேட்டு ஆச்சரியமடைபவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.