விவாகரத்து வழக்கு.. ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா.. 2 வது முறையாக ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் மீண்டும் ஆஜராகாததால் விசாரணையை நவம்பர் 2-ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.
2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை கடந்த 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை இன்று (அக்.19) ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் மீண்டும் ஆஜராகாததால் விசாரணையை நவம்பர் 2-ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.