தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
Captain MIller

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

Captain Miller

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  இந்த பாடலை கபேர் வாசுகி எழுத,  சீன் ரோல்டன் பாடியுள்ளார். இந்நிலையில், இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படம் வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சென்சார் குழு  இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.

From around the web