தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ ரிலீஸ் ஆகாதா ? அதிர்ச்சியில் டோலிவுட் ரசிகர்கள் !

 
Captain Miller

வரும் 12-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.

Captain Miller

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  இந்த பாடலை கபேர் வாசுகி எழுத, சீன் ரோல்டன் பாடியுள்ளார். இந்நிலையில், இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியானது. உலகளவில் பொங்கலை முன்னிட்டு வரும் 12-ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதமே கேப்டன் மில்லர் படம்குறித்த அறிவிப்பு வெளியானது. D47 என அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழ் மக்கள் பேராதரவை கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சிவராஜ்குமார் இணைந்திருப்பது கன்னட மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. முன்னதாக ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால், கேப்டன் மில்லர் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது. தமிழ் மட்டுமல்லாது கன்னடா, மலையாளம், தெலுங்கு மக்கள் மத்தியில் கேப்டன் மில்லர் படத்திற்கான வரவேற்பு அதிகமானது.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாத்தி. சார் என தெலுங்கில் ரிலீஸான இந்த படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் தனுஷ். வாத்தி படத்தின்மூலம் அதிக தெலுங்கு ரசிகர்களை ஈர்த்த தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸுக்கு இருக்கிறது. கேப்டன் மில்லர் படத்திற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் பேராதரவு இருக்கிறது.

கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சில பல காரணங்களால் இந்த ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில் பொங்கல் முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் கேப்டன் மில்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தெலுங்கு மக்கள் இருக்கக்கூடிய ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என கூறப்பட்டிருக்கிறது. இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Captain Miller

பொதுவாகவே பொங்கல் மாதிரியான விழா காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது சாதாரணமான ஒன்று. அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகிறது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், நாக அர்ஜுனாவின் நா சாமி ரங்கா, வெங்கடேஷ் தகுபதியின் சைந்தவ், விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், ரவி தேஜாவின் ஈகுள், தேஜா சஜாவின் ஹனுமான் ஆகிய படங்கள் சங்கராந்தி சிறப்பு படங்களாக வெளியாகிறது.

ஏற்கனவே தெலுங்கு நடிகர்களின் ஆறு திரைப்படங்கள் ரிலீசுக்கு இருக்கும் இந்த சமயத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்களாம் தெலுங்கு திரையுலகினர். அந்த வகையில் பொங்கல் முடிந்து ஓரிரு வாரங்களில் கேப்டன் மில்லர் ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் செய்வார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

பொங்கல் மற்றும் சங்கராந்தி விடுமுறையில் கேப்டன் மில்லர் படத்தை பார்க்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web