குலதெய்வக் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த தனுஷ்!

நடிகர் தனுஷ் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலில் அமர்ந்து சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 26-ம் தேதி அவரது 50வது திரைப்படமான ராயன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவில்களில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் சென்று வழிபாடு செய்தார். முதலாவதாக காலை ஆண்டிபட்டி அருகே முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜாவின் குலதெய்வ கோவிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள், ஸ்ரீ மங்கம்மாள் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து தனுஷின் சொந்த ஊரான போடிநாயக்கனூர் அருகே மல்லிங்காபுரம் கிராமம் செல்லும் சாலையில் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். போடிநாயக்கனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவில் அவரது தாய் விஜயலட்சுமியின் குலதெய்வ கோவிலாகும். இங்கு தனது பெற்றோர்களான கஸ்தூரிராஜா - விஜயலட்சுமி, மகன்கள் யாத்ரா - லிங்கா மற்றும் சகோதரர் செல்வராகவன் உள்ளிட்டோரும் குலதெய்வ வழிபாடு செய்து புறப்பட்டுச் சென்றார்.
இங்கு பரந்து கிடக்கும் பூமி,
— Dhanush (@dhanushkraja) July 23, 2024
உனக்கும் தந்ததைய்யா,
இங்கு
இருக்கும் அத்தனை சாமியும்,
உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace 🤍 pic.twitter.com/sjgM0cwbbh
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் அமர்ந்து சாமி தரிசனம் செய்யும் புகைப்படத்தோடு இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா… என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.