விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் - ஐஸ்வர்யா.. நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்

 
Dhanush - Aishwarya

விவாகரத்து கோரிய வழக்கில் அக்டோபர் 7-ம் தேதி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். 

இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரின் பிரிவு முடிவு குறித்து ரஜினிகாந்த் இதுவரை கருத்து எதுவுமே தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறார். 

Dhanush-Wife-Aishwaryaa-Separate

தனுஷூடனான பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை மாற்ற முயற்சி செய்து பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அதே, போல தனுஷூம் அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கிடைக்கும் நேரத்தில் தனது இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிய போவதாகவும், இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. அது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

Dhanush

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதி தள்ளி வைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

From around the web