நடிகை த்ரிஷா மீது கிரிமினல் வழக்கு? மன்சூர் அலிகான் அடுத்த மூவ்!

 
Mansoor - Trisha

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகை த்ரிஷா மீது வழக்குத் தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.

Mansoor

இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராக கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நடிகை த்ரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்கமுடியாது நான் அவ்வாறு தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுத்து வந்த மன்சூர் அலிகான். தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் புதிதாக மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்ட அறிக்கையில், “த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்ட ஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு, திட்டமிட்டு கலவரம் உண்டு செய்வது, பொது அமைதியை 10 நாட்கள் கெடுத்து மடை மாற்றத் தூண்டியது உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் எனது வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடர உள்ளேன்” என்று அறிவித்துள்ளார்.

Trisha

மேலும், நவம்பர் 11-ம் தேதி தான் பேசிய உண்மை வீடியோவை அனுப்பியுள்ளதாகவும், இந்த வீடியோவைத்தான் ஒரு வாரம் கழித்து கடந்த 19-ம் தேதி அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இன்னும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடர உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மன்சூர் அலிகான் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

From around the web