பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை.. சொந்த ஜாமினில் வெளியே வந்த இயக்குநர் மோகன் ஜி!
பழனி கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டிருந்த இயக்குனர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. இந்த நிலையில், சமீபத்தில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பஞ்சாமிதம் குறித்து சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதில், “நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலக்கப்படு விநியோகிக்கப்படுவதாக நான் செவி வழி செய்திகளை கேள்விப்படிருக்கிறேன். இதுகுறித்த செய்தியே வெளியே வராமல், வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையே அழித்துவிட்டதாககூட நான் கேள்வி பட்டிருக்கிறேன்” என்றார்.
ஆதாரம் இல்லாம இப்படி குற்றச்சாட்டு வைக்கலாமா?
— James Stanly (@JamesStanly) September 21, 2024
pic.twitter.com/vM0E8VYX32
அதற்கு நெறியாளர், “பழனி கோயிலையா குறிப்பிடுகிறீர்கள்” என்று கேட்டதற்கு, “அப்படி ஆதாரமின்றி ஒரு இடத்தின் பெயரை நம்மால் கூற முடியாது. ஆனால் தரமில்லாத பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி ஒரு சமயம் வெளியானது. ஆனால், அது என்ன தரமில்லை என மக்களுக்கு தெரிவித்தார்களா?” என்றார் மோகன் ஜி.
நெறியாளர் உடனே, “இது பழனியில் நடந்த சம்பவம்தானே... அதை சொல்கின்றீர்கள் என்றால், அங்கேதான் தரமின்றி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உரிய முறையில் அழிக்கப்பட்டு காரணமும் அப்போதே அரசால் தெரிவிக்கப்பட்டுவிட்டதே...” என்றார்.
உடனடியாக மோகன் ஜி, “அழிக்கப்பட்டதுதான். ஆனால் ஏன் அழிக்கப்பட்டது என்று சரியாக சொல்லப்படவில்லை. அங்கே பணிப்புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் என்னிடத்தில் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்கள்” என்று தெரிவித்துள்ளார். இது மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பதி லட்டுக்களில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்த பேசுகையில், பழனியை தொடர்புபடுத்தி பேசி, ‘எல்லா இடங்களிலும் இப்படி நடக்கிறது’ எனக்கூறியிருந்தார் மோகன் ஜி. இதையடுத்து இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்தது.
இந்த நிலையில், இயக்குநர் மோகன் ஜி தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து, இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், மாலை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.