இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு.. மாமன்னன் படம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி புகழாரம்
‘மாமன்னன்’ படத்தின் மூலம் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் மாரி செல்வராஜ் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் 29-ம் வெளியான படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேற்று முதல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி.மகேந்திரன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர்.
இந்த நிலையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு நேற்று சிறப்பு திரையிடல் திரையிடப்பட்டது. இதில் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் படம் குறித்து பேசிய ஆர்.கே.செல்வமணி, மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றிப் படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்துவிட்டு அனைவருக்கும் போன் செய்து வாழ்த்து கூறினேன். வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்மையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.