காமெடி நடிகரின் கால் உடைப்பு.. பாஜகவினர் 6 பேர் கைது.. மனைவியால் நேர்ந்த சோகம்!!

 
Venkatesh

மதுரையில் திரைப்பட காமெடி நடிகர் வெங்கடேசனின் கால்களை உடைக்க மனைவி பாஜகவினரை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது பன்முகத் திறமையால் தரமான காமெடி செய்ததன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ். இதனைத் தொடர்ந்து, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர், மதுரை தபால்தந்தி நகர் 3வது தெருவில் வசித்து வருகிறார். 

இவர் தனது சொந்த வீட்டில், தன்னுடைய காதல் மனைவியான பானுமதி மற்றும் ஒரு பெண் குழந்தை உடன் வசித்து வருகிறார். மேலும், இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் இருந்து வருகிறார். இதனிடையே வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், விவகாரத்து பெறுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இருப்பினும், அவ்வப்போது கணவன், மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், காதலித்து திருமணம் செய்த தனது கணவர் விவகாரத்து வழக்கு நடத்துவதாலும், சமூக வலைதளங்களில் மற்ற பெண்களோடு பழகியும் வருவதாக அவரது மனைவி பானுமதி ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Madurai

இதனால் தனது கணவரைத் தாக்கி, அவரது கால்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு முடக்க வேண்டும் என பானுமதி திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெங்கடேசனின் கார் ஓட்டுநரின் மூலம் ராஜ்குமார் என்பவரை பானுமதி அணுகி உள்ளார். 

பின்னர், ராஜ்குமாரிடம் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேசனின் கால்களை உடைக்க பானுமதி திட்டமிட்டு உள்ளார். ஆனால், இந்தத் திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, தனது உறவினரும், பாஜக நிர்வாகியுமான கோசாகுளத்தைச் சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்னையைக் கூறியுள்ளார். 

இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாகக் கூறிய வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேசன் திமுக ஆதரவாளராக இருப்பதாகவும், அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக குறித்தும், பிரதமர், அமித்ஷா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்து, அவரை மிரட்டி அவரது கால்களை உடைப்போம் எனத் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் தபால்தந்தி நகர் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வைரமுத்துவின் கும்பல் வெங்கடேசனின் காரை வழிமறித்து உள்ளது. அது மட்டுமல்லாமல், ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய பின்னர், வெங்கடேசனை நாராயணபுரத்துக்கு கடத்திச் சென்று பாஜக குறித்து கருத்துகளைப் பதிவிடுவாயா என கூறியபடி கடுமையாகத் தாக்கி உள்ளனர். 

Tallakulam PS

அப்போதுதான் அவரது கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வெங்கடேசனின் கார் ஓட்டுநரான மோகன், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அழுது புரண்டபடி புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடேசனின் மனைவி பானுமதி தூண்டுதலின் பேரில், அவரது ஓட்டுநர் மோகனின் உதவியோடு வெங்கடேசனை தாக்கியது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தனது உறவுப் பெண்ணான பானுமதியின் குடும்ப பிரச்னைக்காக பாஜக நிர்வாகி வைரமுத்து, பாஜகவினரை அடியாட்களாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து வெங்கடேசனின் மனைவி பானுமதி, வெங்கடேசனின் கார் ஓட்டுநரான மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த மோகன் என்கிற பென்ஸ் மோகன், மதுரை புதூர் கற்பகம் நகரைச் சேர்ந்த ராஜ்குமார், பாஜக நிர்வாகிகளான மதுரை கோசாகுளத்தைச் சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, செல்லூரைச் சேர்ந்த பாஜக 28வது வார்டு பட்டியல் அணி மண்டலத் தலைவர் மலைச்சாமி மற்றும் மதுரை மேலபனங்காடி பாஜக கிழக்கு மண்டலச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 6 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

From around the web