செக் மோசடி வழக்கு... நடிகர் விமலுக்கு ரூ. 300 அபராதம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
vimal

செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விமல். அதனைத் தொடர்ந்து சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், எத்தன், வாகை சூட வா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தயாரிப்பதற்காகக் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.50 கோடி கடனாகப் பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் கடன் பெற்ற தொகையை நடிகர் விமல் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Vimal

பின்னர் அந்த தொகையை நடிகர் விமல் காசோலையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த காசோலையை வங்கியில் செலுத்திய பிறகு அவர் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி காசோலை திரும்பி வந்துள்ளது. இது குறித்து நடிகர் விமல் மீது செக் மோசடி வழக்கு ஒன்றைத் தயாரிப்பாளர் கோபி போட்டுள்ளார்.

இந்த வழக்கைச் சென்னையில் உள்ள 11வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் முன்னரே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். பின்னர் இந்த வழக்கு குறித்து சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் யாரும் முன் வரவில்லை. அதன் பின்னர் முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து நீதிபதி வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.

High-Court

அதன் பின்னர் முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்குத் தயாரிப்பாளர் கோபி வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விமல் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். எனவே விமல் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு 300 ரூபாய் வழக்குச் செலவு அபராதமாக விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி ஒத்தி வைப்பதாக நீதிபதி கூறினார்.

From around the web