அரசியலில் இறங்கும் சந்திரமுகி நடிகை.. பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி?

 
Kangana Ranaut

நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, ஃபேஷன், குயின் என ஹிட் கொடுத்தார். தனது கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வந்தார் கங்கனா. எந்த ஒரு திரையுலக பிண்ணனியும் இல்லாமல் உச்சம் தொட்ட நடிகை என்ற பெயர் வழங்கப்பட்டது. கங்கனா நடித்த குயின் படம் மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்டது. இந்த படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்தியில் தொடர்ந்து ஹிட் கொடுத்த நடிகை தமிழில் ‘தாம் தூம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ படத்தில் நடித்தார். அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார். பின்னர் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ளார்.

Kangana-Ranaut

தற்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எமர்ஜென்சி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், தொடர்ந்து சில ஆண்டுகளாகவே பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வந்த கங்கனா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது அடுத்தாண்டு தேர்தலில், பாஜக சார்பில் கங்கனா போட்டியிடுவதை அவரது தந்தை அமர்தீப் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.


இருப்பினும், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை, கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கங்கனா ரனாவத் சந்தித்த பின்னர், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற, ஆர்எஸ்எஸ் முகாமில் பங்கேற்றார்.

மேலும், அவரது கருத்துக்களும், ஆர்எஸ்எஸ் தத்துவமும் இணக்கமானவை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. மண்டி மக்களவைத் தொகுதி அல்லது சண்டிகரில், கங்கனா போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

From around the web