கோட் பட நடிகை மீது வழக்குப்பதிவு.. தயாரிப்பு நிறுவன ஊழியரை தாக்கியதாக புகார்

 
Parvathy Nair

சினிமா தயாரிப்பு நிறுவன ஊழியரைத் தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்பட 6 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (27) என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது, அந்நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயர் வீட்டில் அவ்வப்போது சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தார்.

Parvathy Nair

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பார்வதி நாயர், தனது வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரம், லேப்டாப், செல்போன் திருடு போனதாகவும், தனது வீட்டில் வேலை செய்யும் சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகம் இருப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர். பின்னர், வெளியே வந்த அவர், மீண்டும் அதே சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

அப்போது, அந்நிறுவனத்துக்கு பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் வந்ததாகவும், சுபாஷ் சந்திர போஸைத் தாக்கியதாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். ஆனால், தேனாம்பேட்டை போலீசார் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Parvathy Nair

இதையடுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திர போஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் சந்திரபோஸின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார், நடிகை பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் இளங்கோவன், செந்தில், அருள் முருகன், அஜித் பாஸ்கர், ராஜேஷ் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web