நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு.. கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார்!

 
Saranya Ponvannan

கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1987-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதனைத் தொடர்ந்து 1980-களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். அதன்பின், 2003-ம் ஆண்டு வெளியான ‘அலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீன்டரி கொடுத்தார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவிக்கும், நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Saranya Ponvannan

இந்த நிலையில் நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு செல்ல தனது காரை எடுப்பதற்காக வீட்டின் இரும்பு கேட்டை திறந்தார். இதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் காரில் இரும்பு கேட் உரசியது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆவேசத்துடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

Virugambakkam

இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார். மேலும் இந்த புகாரில் அவர் சிசிடிவி காட்சிகளையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web