இப்படிப் பண்ணலாமா தனுஷ் சார்? #NEEK

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என அவதாரம் எடுத்துள்ள தனுஷ் இயக்கி வெளியாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படங்கள் பதின்ம வயது இளைஞர்கள் இளைஞிகளைப் பற்றி படமாக அமைந்திருந்தது. அதே வரிசையில் இக்கால 2கே கிட்ஸ் இளைஞர்கள் இளைஞிகளை மனதில் வைத்து அவர்களின் விருப்ப வெறுப்புகளைப் பற்றிய ஒரு காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
நாயகனாக தனது அக்கா மகனை களம் இறக்கியுள்ள தனுஷ் அவருக்கு மூன்று கதாநாயகிகளையும் கொடுத்துள்ளார். வழக்கமான காதல் கதை தான் என்று ஏற்கனவே தனுஷ் கூறியதால் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கத் தோன்றுகிறது. அதையே சாதகமாக்கிக் கொண்டுள்ளார் இயக்குனர் தனுஷ்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்களும் 2கே கிட்ஸ் ரகம் தான். ஏடி மற்றும் கோல்டன் ஸ்பாரோ பாடலும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கோல்டன் ஸ்பாரோ பாடலுக்கு பிரியங்கா மோகன் உடையலங்காரத்தை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம். ஜி.வி.பிரகாஷும் ஒரு பாடலில் தோன்றி இசைக்கச்சேரி நடத்துகிறார்.
ஆடுகளம் நரேன், சரண்யா போன்ற அப்பா அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். வில்லனும் இல்லாமல் நல்லவனாகவும் இல்லாமல் சாதாரண பணக்கார மனிதராக வந்து போகிறார் சரத்குமார். தோற்றத்தில் அவருடைய வயது தெரிகிறது. மிஸ்டர் மெட்ராஸ் சரத்குமார் தானா இவர்?
சின்னச்சின்ன திருப்பங்களுடன் படம் சோர்வில்லாமல் நகர்ந்து செல்கிறது. கடைசியில் க்ளைமாக்ஸ் காட்சியை 2ம் பாகம் என்று சொல்லி முடித்து விட்டார். 2கே கிட்ஸ்களின் காதல், ப்ரேக் அப், நண்பனின் காதலியை ஒருதலையாக காதலிப்பது என்று இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையையே படம்பிடித்து இருப்பதால் 2 கே கிட்ஸ் களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
ஆனால் படத்தில் வரும் அப்பா, அம்மாவைத் தவிர அனைத்து கேரக்டர்களும் மதுப்புட்டியுடனே காட்சி தருவது எப்படி தனுஷ் சார். சரக்குக்காக தனி பட்ஜெட் போட்டு எடுத்திருப்பாங்க போல! இந்தக் காலத்திலும் மதுவை தொட்டுப்பார்க்காத பசங்களும் இருக்காங்களே தனுஷ் சார். அவங்க மாதிரி ஒருத்தர் கூடவா உங்க கண்ணுல படல.
ஆனாலும். இயக்குனர் தனுஷ் வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதியாகச் சொல்லலாம்.