நாளை வெளியாகிறது ‘பிஎஸ் ஆந்தம்’... மாஸ் அப்டேட் கொடுத்த ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு... ரசிகர்கள் உற்சாகம்
‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் ‘பிஎஸ் ஆந்தம்’ நாளை (ஏப்ரல் 15) வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
The magic of #PS2 continues with the launch of #PS2Anthem!
— Lyca Productions (@LycaProductions) April 13, 2023
Guess who is launching the anthem on April 15th, 7 PM at Anna University!#CholasAreBack#PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/NTJQRXTn4s
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் 'பிஎஸ் ஆந்தம்' வருகிற 15-ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.