பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!

 
Parineeti Chopra

பாலிவுட் நடிகை பரினீத் சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் உறவுமுறை தங்கையான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.

சமீப காலமாக பரினீதிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னை பிசியாகவே வைத்துக்கொண்டார். இதனிடையே இவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவை காதலித்து வருவதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை.

Parineeti Chopra

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது தான் தங்களது காதலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ராகவ் சத்தா எம்.பி., என்பதால் இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஏராளமான அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமண தேதியை அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த ஜோடி, நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் பெரியளவில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட சில பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.


குறிப்பாக பரினீதி சோப்ராவின் அக்கா பிரியங்கா சோப்ராவே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் சமூக வலைதளம் வாயிலாக தனது தங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். காதல் திருமணம் செய்துகொண்ட பரினீதி - ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web