‘பிளடி பெக்கர்’ படம் நஷ்டம்.. நெல்சன் எடுத்த அதிரடி முடிவு
கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் நஷ்ட தொகையில் ரூ. 5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
2018-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் ‘பிலமண்ட் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான முதல் படம் ‘பிளடி பெக்கர்’.
இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கி விநியோகித்த பைவ் ஸ்டார் நிறுவனத் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு கிட்டத்தட்ட ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே அந்த படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் அந்த நஷ்ட தொகையில் 5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.