அஜித் நடிப்பில் பில்லா 3 வருமா? விஷ்ணுவர்த்தன் தகவல்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1980ல் வெளியான பில்லா மாபெரும் வெற்றிப்படமாகும். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் மொழி மாற்றமே பில்லா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதே பில்லா படத்தை அஜித்குமார் நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். 2007ல் வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா, நமீதா வுடன் அஜித் இரட்டை வேடத்தில் அசத்தி இருந்தார். அஜித்தின் பில்லா பெரும் வெற்றியடைந்ததை அடுத்து பில்லா 2 படமும் வெளியானது. 2012ல் வெளியான பில்லா 2 படத்தை சக்ரி டோலட்டி இயக்கியிருந்தார்.
தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் முடிவடைந்துள்ளது. அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்திப் கிஷன், ஆரவ் நடித்துள்ள இந்தப்படம் 2025 பொங்கள் திருநாளில் வெளியாக உள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். திரிஷா, யோகிபாபு, அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயினை தொடர்ந்து பல்கேரியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பில்லா, ஆரம்பம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா? பில்லா 3 வருமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஷ்ணுவர்த்தன், பில்லா 3 வரவில்லை ஆனால் அஜித்துடன் வேறு ஒரு படம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியுள்ளார். மீண்டும் அஜித் - விஷ்ணுவர்த்தன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.