பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத் தொகையுடன் கிடைத்த பிரம்மாண்ட கிஃப்ட்!

 
Bigg boss

பிக்பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Bigg Boss

இதில், மாயா, விசித்ரா, பூர்ணிமா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு, கூல் சுரேஷ்,  பாவா செல்லதுரை, அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல சண்டைகள், சர்ச்சைகள் என இந்நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்தார். அதன்படி, இறுதிப்போட்டிக்கு விஷ்ணு, மாயா, அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோர் நுழைந்தனர். டிக்கெட் டு பைனல் டாஸ்கில் வெற்றிபெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைந்தார் விஷ்ணு. வாக்குகளின் அடிப்படையில் மற்ற நான்கு போட்டியாளர்கள் தேர்வானார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு, விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசனின் இறுதி போட்டி நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக கானா பாலா மற்றும் நிக்‌ஷன் ஆகியோர் இணைந்து பாடல் பாடினர். அப்போது பாடலுக்குரிய முன்னாள் போட்டியாளர்கள், மேடையேறி உற்சாகமாக நடனமாடினர். இசை விருந்துக்கு பின்னர் இறுதிப்போட்டியாளர்கள், தாங்கள் பிக்பாஸுக்கு வந்ததன் நோக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசனிடம் கூல் சுரேஷ், கானா பாலா உள்ளிட்ட போட்டியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு கமல்ஹாசன் பதிலளித்தார். இதையடுத்து சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பு, அறிவு ஆகியோர் இணைந்து, கமல்ஹாசனின் 237வது படத்தை இயக்குகின்றனர் என்ற அறிவிப்பு வெளியானது.

Bigg boss

அதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் அறிவிப்பு வெளியானது. மக்கள் ஓட்டளித்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வானார். இதன்மூலம் வைல்டு கார்ட் என்டரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பட்டம் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார் அர்ச்சனா. இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றார். டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ50 லட்சமும், மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரும் பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன் எழுதிய Polity simplified புத்தகத்தை, கமல்ஹாசன் பரிந்துரைத்தார். ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ராஜூ, ஆரி, அசீம் ஆகியோர் முறையே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் ஆறு சீசன்களின் டைட்டிலை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web