கர்நாடகாவில் தடை.. ஓசூரில் தக் லைஃப் வசூல் மழை!!

கர்நாடாகாவில் ரஜினிகாந்தை விட கமல்ஹாசனுக்குத் தான் கூடுதல் ரசிகர்கள் என்பது வரலாற்று உண்மை. தமிழர்கள் மட்டுமல்லாம, கன்னடர்கள், தெலுங்கர்கள் என அனைத்து மொழி பேசும் கர்நாடகா மக்களும் கமல்ஹாசன் நடிப்பை வியந்து பார்த்து ரசிப்பவர்கள். அபூர்வ சகோதரர்கள் படம் 100 நாட்கள் பெங்களூரில் ஓடியதையே இதற்கு சாட்சியாகச் சொல்லலாம்.
கமல்ஹாசன் பேச்சை சாதாரண கன்னட மக்கள் பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை. சமஸ்கிருதம் தான் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று அமித்ஷா பேசியபோது எப்படி அமைதியாக இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் பாஜக - சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள் தான் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தப் பிரச்சனையில் நீதிபதியும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறியதால் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதையே நிறுத்தி வைத்துள்ளார் கமல்ஹாசன்.
ஆர்வமிக்க ரசிர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, கர்நாடாக எல்லையில் உள்ள ஊர்களில் தக்லைஃப் படம் கூடுதல் அரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது ஓசூர் ஆகும். ஓசூரில் 5 திரையரங்குகளில் காலை 9 மணி முதல் தக் லைஃப் படம் திரையிடப்பட்டுள்ளது. வழக்கமாக இங்கே ஒன்று அல்லது இரண்டு திரையரங்குகளில் தான் ஒரு படம் வெளியாகும்.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓசூருக்கு வந்து தக் லைஃப் படத்தை கண்டு களித்துச் சென்றுள்ளனர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ரசிகர்கள்.