விமானநிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம்.. நடிகை அதிதி ராவ் வெளியிட்ட வீடியோ!
லண்டன் விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அதிதி ராவ் பகிர்ந்துள்ளார்.
2007-ல் வெளியான ‘சிருங்காரம்’ என்னும் தமிழ்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. அதனைத் தொடர்ந்து 2011-ல் வெளியான ‘ஏ சாலி சிந்தகி’ என்ற படத்தின் மூலம் பிரபலமன இவர், ராக்ஸ்டார், மர்டர் 3, பாஸ், வாசிர், காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், பத்வாமத் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது முகலாய மன்னன் அக்பரின் வாழ்க்கை வரலாற்று கதையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் தாஜ் என்ற வெப் தொடரில் அதிதி ராவ் நடித்து இருக்கிறார். இதில் அக்பர் கதாபாத்திரத்தில் நசுருதீன் ஷாவும், அவரது மகன் சலீமாக ஆஷிம் குலாட்டியும், இவரது காதலி அனார்கலி வேடத்தில் அதிதிராவும் நடித்துள்ளனர்.
இவர், விரைவில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து அதிதி ராவ் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பையில் இருந்து வந்த விமானம் லண்டனில் தரையிறங்கியது. இங்கு எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜை எதிர்பார்த்து 19 மணி நேரமாக நான் காத்திருக்கிறேன். ஆனால் இன்னும் சூட்கேஸ் வந்து சேரவில்லை. இது மோசமான அனுபவம். அனைத்து பயணிகளும் காத்திருந்து வெறுப்படைந்து உள்ளனர். பசியால் குழந்தைகள் வாடுகின்றனர். லக்கேஜ் இன்னும் வரவில்லை. அதை விடுவிக்க முடியுமா. விமான நிலைய ஊழியர்கள் எந்த உதவியும் செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இப்போது தன்னுடைய லக்கேஜ் திரும்பி வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். லக்கேஜை வாங்கிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அதிதி, ‘45 மணி நேரம் கழித்து என்னிடம் யார் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இது எனக்கு வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.