ஆருத்ரா மோசடி வழக்கு.. பிரபல நடிகரின் சொத்துக்கள் முடக்கம்? 

 
RK Suresh

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு துறை முடிவு செய்துள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல்ராஜ், செந்தாமரை, சந்திர கண்ணன், ஹரீஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. தனக்கு பாஜகவில் செல்வாக்கு இருப்பதால் இந்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதாக கூறி ரூ 12.50 கோடியை வாங்கியதாக ரூசோ வாக்குமூலம் அளித்துள்ளார்.

RK Suresh

ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் பாஜகவின் நிர்வாகி ஹரீஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. ஆருத்ராவை தொடர்ந்து எல்பின் நிதி நிறுவன நிறுவனருக்கும் ஆர்.கே. சுரேஷ் உதவி செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் 10 மாதங்களாக ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் நேரில் ஆஜராகாமல் விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வருகிறார். இவர் துபாயில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

RK Suresh

அண்மையில் கூட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒப்படைக்க துபாய் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

From around the web