“அண்ணா.. NO COMMENTS” இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் !

 
Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அபுதாபிக்கு சென்று திரும்பிய நிலையில், ஆன்மீக பயணமாக இன்று இமயமலைக்கு புறப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு இமயமலை பயணத்தை அப்படியே தவிர்த்து விட்டார்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

Rajinikanth

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்” என்று கூறினார். தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.


நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார்.

ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அங்குள்ள இந்து கோவிலுக்கும் சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.

From around the web