அங்காடித் தெரு பட நடிகை சிந்து காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி!

அங்காடித் தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 42.
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இவர் அங்காடித் தெருவை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அந்த சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாகவும், இறைவன் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நிம்மதியாக வாழ விட வேண்டும் என தெரிவித்து வந்தார். பல பேட்டிகளில் தன்னுடைய வேதனையை மற்றும் சிரமங்களை தெரிவித்து இருந்தார். அதேசமயம் சிலருக்கு உதவிகளையும் தன் செய்து வந்தார்.
அவருக்கு ஆரம்பத்தில் ஒருபுறம் மட்டும் மார்பகம் நீக்கப்பட்டு இருந்தது. இறுதியாக இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் அவருடைய வலசரவாக்கம் அன்பு இல்லத்தில் காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்காடி தெரு சிந்துவின் இறுதிச் சடங்கு இன்று விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “இன்று அதிகாலை 2.15 அளவில் திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து இயற்கை எய்தினார். அவர், ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.