தனுஷுடன் இணையும் அமரன் இயக்குநர்.. இன்று படத்தின் பூஜை.. ரசிகர்கள் உற்சாகம்

 
D55

நடிகர் தனுஷின் 55வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய படம்தான் ‘அமரன்’. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ‘அமரன்’ படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளார்.

D55

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமிதான் இயக்கவுள்ளார் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘D55’ படத்தை கோபுரம் பிக்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார், படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, இயக்குநர் வெற்றிமாறன், அன்புச்செழியன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும், இன்று காலை ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பை பட போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். ஒரே நாளில் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட் வெளியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web