போன் நம்பரால் ‘அமரன்’ படத்திற்கு வந்த சோதனை.. ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்!

 
Amaran

அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கல்லூரி மாணவர் படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய ‘அமரன்’ படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது.

இதையடுத்து அமரன் படத்தின் பரபரப்புக்கு மத்தியில், அந்த படத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Amaran

அமரன் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ஹீரோயின் சாய் பல்லவி தனது போன் நம்பர் என சிவகார்த்திகேயனிடம் ஒரு நம்பரை கொடுப்பார். அந்த நம்பர் தெளிவாக தெரியும் விதமாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சாய் பல்லவி குறிப்பிட்டிருக்கும் அந்த நம்பர் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் என்பவருடையது என தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சாய் பல்லவி கொடுத்த என் என்பதால் பலரும் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசி முயற்சித்தும், மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளனர். இதனால் தொடர் கால்கள் மற்றும் மெசேஜ்கள் வந்த நிலையில், அமரன் படத்தில் தனது எண் கொடுக்கப்பட்டிருப்பது வாகீசனுக்கு தெரியவந்தது.

தொடர்ந்து போன் கால்கள், மெசேஜ்கள் வந்ததால் தொல்லை தாங்க முடியாமல் தனது போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். அவசரமாக கால் செய்த போன் ஆன் செய்தாலும் தனக்காக கால் செய்ய முடியாத அளவில் நாளுக்கு நாள் போன் தொல்லை அதிகரிக்க மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

High-Court

இந்த விவகாரம் தொடர்பாக ஷோஷியல் மீடியாவில் அமரன் படக்குழுவை டேக் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் மாணவர் வாகீசன். அதில் தனது நம்பர் தெரியும் காட்சியை பிளர் செய்யுமாறும் கூறியிருந்தார். ஆனால் அதற்கு படக்குழுவினர் தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் தற்போது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமரன் படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் கால்கள், மெசேஜ்களால் தன்னால் படிக்கவோ, தூங்கவோ முடியவில்லை. தனது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற விஷயங்களில் இந்த நம்பரை தான் இணைத்துள்ளேன். எனவே என்னால் இந்த நம்பரை மாற்ற முடியாது. எனவே தனக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு அமரன் படக்குழு நஷ்ட ஈடு தரக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.