திருமணமான 2 மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்… ரசிகர்கள் வாழ்த்து!

 
Amala Paul

பிரபல நடிகை அமலா பால் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைதலங்களில் அறிவித்துள்ளார்.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amala Paul

இதன்பிறகு பாண்டிச்சேரியில் தங்கி இருந்த அமலாபால், பயணங்கள் செல்வது, பிடித்த இடத்திற்கு செல்வது என தன்னுடைய வாழ்வியலை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் இந்தி பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களும் வெளியாக்கின.

இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அந்த செய்தியை அமலா பால் மறுத்தார். ஆனாலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் எனவும் கூறப்பட்டது. இது எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த அமலா பால், பல வெளிநாடுகளுக்கு செல்வது, அட்வென்ச்சர் இடங்களுக்கு செல்வது என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

A post shared by Amala Paul (@amalapaul)

இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகள் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. குடும்பத்தினர் மட்டுமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.

அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web