அஜித் பட கலை இயக்குநர் மிலன் மரணம்… படக்குழுவினர் அதிர்ச்சி!

 
MIlan

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1999-ல் கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மிலன், சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன் மற்றும் அந்நியன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். அதன்பின், 2006-ல் ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய மிலனுக்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி அஜித்தின் பில்லா படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய மிலனின் பணிகள் அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்தடுத்து தான் நடித்த ஏகன், வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்களிலும் அவருக்கே வாய்ப்பளித்தார் அஜித். 

Milan

மேலும், வேட்டைக்காரன், வேலாயுதம், போகன், ஜானி, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்கு கூட மிலன் தான் கலை இயக்குநராக பணியாற்றி வந்தார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அஜர்பைஜானில் தொடங்கியது. 

இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித், நடிகை திரிஷா, இயக்குனர் மகிழ் திருமேனி உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்று அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். கலை இயக்குனர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார்.

RIP

இந்நிலையில், இன்று காலை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கலை இயக்குனர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை படக்குழுவினர் மருத்துவமனை அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதனால் அஜித் உள்பட விடாமுயற்சி படக்குழுவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடலை சென்னைக்கு கொண்டுவர 2 நாட்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web