AUDI காரில் 234 கி.மீ வேகத்தில் பறக்கும் அஜித்குமார்.. அசால்ட்டாக ஒற்றைக் கையில் கார் ஓட்டுறாரே!
நடிகர் அஜித்குமார் காரில் 234 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1992-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
234 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் பயணிக்கும் அஜித்குமார்
— lawrence (@Lawrence_Editor) August 29, 2024
இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!#AjithKumar #Audicar #viralvideo pic.twitter.com/ZsD5NDkqnK
பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.
இந்நிலையில், அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்திற்குச் செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே வீடியோவில் கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். மேலும் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தமிழ் நாட்டிலே அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலோ எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.