15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது.. மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

 
Jayam Ravi

நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. பிரபல தயாரிப்பாளும், திரைக்கதை எழுத்தாளருமான மோகனின் மகன் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பிரதர் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். படப்பிடிப்புக்கு இடையில் குடும்பத்துடன் ஜெயம் ரவி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதும் வழக்கம். இதுதொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

Jayam Ravi

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி - ஆர்த்தி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்துப் பெறும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், ஜெயம் ரவி திருமண வாழ்வில் இருந்து விலகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.


இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web