பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
Jayaprada

முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர், 1974-ல் வெளியான ‘பூமி கோசம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், 1976-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘மன்மத லீலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

90களின் தொடக்கத்தில் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திய அவர் படங்களில் கௌரவ வேடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை 1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், என்.டி ராமா ராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994-ம் ஆண்டு ஜெயப்பிரதா தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அந்த கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைத்துக் கொண்டார்.

JayaPrada

சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமும் இருந்து விலகினார். அதன் பின்னர் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் 2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் அவரின் பெயரிலேயே தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை.

JayaPrada

இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

From around the web