நடிகை ராஷ்மிகா மந்தனாவின் DEEP FAKE வீடியோ.. முக்கிய குற்றவாளி கைது!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்ட முக்கிய குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார். 2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். அது ராஷ்மிகா மந்தனாவே இல்லை என்பதும், அது டீப் ஃபேக் செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான இங்கிலாந்தில் வசிக்கும் யுடியூவரின் வீடியோ என்பதும் தெரியவந்தது. அப்போது இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனமுடைந்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்ட முக்கிய குற்றவாளியான 24 வயது இளைஞர் நவீன் என்பவரை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே ராஷ்மிகவின் டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறகு இதனால் பிரச்சனை ஏற்படக்கூடும் என தெரிந்த உடன் அந்த பக்கத்தின் பெயரையும், வீடியோவையும் நீக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் டீப் ஃபேக் வீடியோவை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.