ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பூர்ணா..! குவியும் வாழ்த்துகள்!!
நடிகை பூர்ணாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவரின் உண்மையான பெயர் ஷாம்னா கசிம். கேரளாவை சேர்ந்த இவர், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கந்தகோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்தார். பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அறிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா, தன்னுடைய கர்ப்பகாலத்தில் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதே போல் கடந்த மாதம் இவருக்கு நடந்த, வளைகாப்பு புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் தற்போது நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. அதன்படி இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாய் - சேய் என இருவருமே நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் குழந்தையை கையில் ஏந்தியபடி, நடிகை பூர்ணா மருத்துவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.