பணமோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி கைது

 
Jayalakshmi

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி சென்னை திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ மூலம் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி அவர் மீது நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.‌

இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ஜெயலட்சுமியோ இந்த அறக்கட்டளைதான் நீண்ட ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் ஒரே பெயரில் அறக்கட்டளைகளையோ நிறுவனங்களையோ இருவருக்கு எப்படி ஒதுக்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருக்கும் சினேகன் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்றார்.

Jayalakshmi

இதனையடுத்து சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, சினேகன், ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மூன்று மணிநேர விசாரணைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Jayalakshmi

பாடலாசிரியர் சினேகன், தனது சினேகம் அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு சொந்த பணத்தில் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் 2015-ம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை மூலம் உதவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை போலியாக சமூக வலைதளங்களில் தொடங்கி பண வசூலில் ஈடுபட்டதாக நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் புகார் அளித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

From around the web