6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதாவிற்கு 15 நாள் கெடு.. ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

 
Jaya Prada

நடிகை ஜெயபிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர், 1974-ல் வெளியான ‘பூமி கோசம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், 1976-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘மன்மத லீலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

90களின் தொடக்கத்தில் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திய அவர் படங்களில் கௌரவ வேடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை 1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், என்.டி.ராமா ராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994-ம் ஆண்டு ஜெயபிரதா தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அந்த கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைத்துக் கொண்டார்.

Jaya Prada

சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமும் இருந்து விலகினார். அதன் பின்னர் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் 2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் அவரின் பெயரிலேயே தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயபிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. 

இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயபிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயபிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு  கோர்ட், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.

Jaya Prada

தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயபிரதா தரப்பில் சென்னை நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனுவை நீதிபதி ஜி.ஜெயசந்திரன், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என ஜெயபிரதா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்துக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

From around the web