அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்!

 
Gayathri Raguram

நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இன்று அதிமுகவில் இணைந்தார்.

2002-ல் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் காய்திரி ரகுராம். அதனைத் தொடர்ந்து ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 2006-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தன்னை கொடுமை செய்வதாக கூறி 2010-ல் விவாகரத்து பெற்றார்.

Gayathri Raguram

அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன்பின், அவருக்கு வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி  கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பாஜகவுக்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார் காயத்ரி. அதேசமயம், தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இதனால், அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்பட்டது.


இந்த நிலையில் திடீரென திருமாவளவனை சந்தித்து வாழ்த்து கூறினார். அவர் வேறு அரசியல் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறியதுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

From around the web