நடிகை சித்ரா மரண வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனு!

 
VJ Chitra

நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனும், அதேபோல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும், சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

VJ Chitra & Hemnath

வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் கூட, அந்த விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை காமராஜ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும், 2021ம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டை பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் சித்ராவின் தந்தை காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

VJ Chitra

மேலும் முதுமை காரணமாக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், சித்ராவின் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று காமராஜ் கோரிக்கை விடுத்திருக்கிறார். சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web