மாற்றுத்திறனாளி ரசிகருடன் நடிகர் விஜய்.. ட்ரெண்டாகும் வீடியோ!

 
Vijay

கேரளாவில் நீண்ட நேரமாக காத்திருந்த மாற்றத்திறனாளி இளைஞரின் அருகில் சென்று, நடிகர் விஜய் முட்டிப்போட்டு புகைப்படம் எடுத்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி ‘தி கோட்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Vijay

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நேரம் போக, தன்னைக் காண குவியும் ரசிகர்களை தினமும் சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் சென்றபோதே அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அங்கிருக்கும் ரசிகர்களின் ஆரவாரமும், விஜய்யின் கியூட் மொமண்ட்ஸ் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் கூட, தன்னை காண வந்த ரசிகர்களிடம் வேன் மீது ஏறி நின்று மலையாளத்தில் பேசினார். அதில்,சேச்சி சேட்டன்மார்களே, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ஓணம் பண்டிகையில் நீங்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதே அளவுக்கு சந்தோஷத்துடன் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் என்னுடைய நண்பா, நண்பிகளைப்போல நீங்கள் வேற லெவல். எல்லோருக்கும் கோடான கோடி நன்றிகள் என்றார்.


விஜய் கேரளாவிற்கு வந்ததில் இருந்து அவரை கேரளா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு விஜய்யும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், நேரம் காலம் பார்க்காமல் ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து வருகிறார். நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் வந்த போது அவரை பார்க்க நீண்ட நேரமாக காத்திருந்த மாற்றத்திறனாளி இளைஞரின் அருகில் சென்று, முட்டிப்போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். விஜய்யின் இந்த நெகிழ்ச்சியான செயல் பலரை நெகிழவைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தலைகனமே இல்லாத மனுஷன் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web