பிரபல நடிகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 
S V Shekhar

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து வெளியிட்டதற்காக நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், கடந்த 2018-ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

S V Shekhar

அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.எல்.ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

S V Shekhar

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தினார்.

From around the web