அதிர்ச்சி.. துணிவு பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்
பிரபல இந்தி நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ படத்தில் சுனில் தத்தா எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார் ரிதுராஜ் சிங். மெயின் வில்லனான ஜான் கொக்கனுடன் சேர்ந்து வங்கி பணத்தை ஆட்டையை போடும் மூவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் இவரை அடித்து வெளுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
வருண் தவான் நடிப்பில் வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்திருப்பார். ஜான் ஆபிரகாமின் சத்யமேவ ஜயதே, யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர் ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஹே பிரபு, கிரிமினல் ஜஸ்டிஸ், அபய், நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட் மற்றும் மேட் இன் ஹெவன் உள்ளிட்ட ஏகப்பட்ட வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.
ரிதுராஜ் சிங் கணைய அழற்சி பாதிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் பிரபலமாக இருந்து வந்த ரிதுராஜ் சிங் திடீரென உயிரிழந்தது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மனோஜ் பாஜ்பாய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? கண்விழிக்கும்போது இப்படி ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. உன் ஆன்மா சாந்தி அடையட்டும் என் நண்பா ரிதுராஜ்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஹன்சல் மேத்தா தனது எக்ஸ் பதிவில், “ரிதுராஜ்! என்னால் நம்ப இயலவில்லை. ‘கே ஸ்ட்ரீட் பாலி ஹில்’ என்ற ஒரு சீரியலில் அவரை நான் குறைவான நாட்கள் இயக்கியுள்ளேன். ஆனால் நாளடைவில் நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். நாங்கள் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால் என்னிடம் அதுகுறித்த இனிமையான நினைவுகள் உள்ளன. பயன்படுத்தப்படாத நடிகர் மற்றும் இதமான மனிதர். திடீரென்றும், மிக விரைவாகவும் சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சோனு சூட், தனது எக்ஸ் பக்கத்தில் ரிதுராஜின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.