நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம்... வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம்!!

 
Manobala

பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் கூட சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Manobala

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

Manobala

இந்த நிலையில் அவரது மகன் ஹரிஷ் தனது தந்தையின் மறைவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது,  “என் அப்பா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். இரண்டு வாரமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.  ஆனாலும் உயிரிழந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய மகன் தங்களது குடும்ப வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். இதையடுத்து தற்போது நடிகர் மனோபாலாவின் உடல் அங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

From around the web