நடிகர் கிங்காங் பிறந்தநாளில் உயிரிழந்த தாய்.. வாழ்த்து சொன்ன கொஞ்ச நேரத்துல நடந்த துயரம்
நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.
1988-ல் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஊரை தெரிஞ்சிகிட்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கிங்காங். இவரது இயற்பெயர் ஷங்கர் ஏழுமலை. சினிமாவில் இவர் கிங்காங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதால் அதே பெயரில் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார். நகைச்சுவை நடிகரான இவர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார்.
சுமார் 40-க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் கிங்காங் சினிமாவை மட்டும் நம்பாமல் தனியாக தொழில் ஒன்றையும் செய்து வருகின்றார். அதாவது, கோவில் திருவிழா, திருமணம், காதுகுத்து விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் வருகின்றார்.
அண்மையில் நகைச்சுவை நடிகர் நாராயணன் நடிகர் கிங்காங் குறித்து மிகவும் பாராட்டி பேசினார். அதாவது சினிமாவில் வாய்ப்பு இல்லாத நகைச்சுவை நடிகர்களுக்கு கிங்காங்தான் வேலை கொடுத்து வருகின்றார். கிங்காங் பலருக்கு வாழ்க்கை கொடுத்து வருகின்றார் என பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பாராட்டையும் பெற்றுத் தந்தது.
சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நடிகர் கிங்காங்கிற்கு இன்று பிறந்தநாள். இவருக்கு இன்று தனது 53வது பிறந்தநாள். பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது அவருடன் அவரது பெற்றோர்களும் இருந்தனர்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் கிங்காங்கின் தயாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காசியம்மாளை பரிசோதித்து பார்த்த மருத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த நடிகர் கிங்காங் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள், பிரபலங்கள் கிங்காங் தனது பிறந்த நாளில் அவரது தாயாரை இழந்ததால் எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் தேற்றி வருகின்றனர்.