KGF-ல் இணையும் நடிகர் அஜித்..? 3 வருடம் கால்ஷீட் கேட்கும் பிரசாந்த் நீல்!
இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கிய கேஜிஎப் யுனிவர்ஸில், நடிகர் அஜித்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் அண்மையில் நிறைவடைந்தது. அதே நேரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை முடித்து இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
கேஜிஎப் படம் முழுவதும் இந்தியா முழுவதும் கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை விடாமுயற்சி படப்பிடிப்பின் இடைவெளியில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பிரசாந்த் நீல் - அஜித் கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாவது குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதுதொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்க உள்ள திரைப்படம் ஒன்றில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றொரு படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களுக்காகவும் பிரசாந்த் நீல் மொத்தம் 3 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து இயக்க உள்ள இரண்டாவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்தும், கேஜிஎப் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ்ஷூம் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த காட்சி பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்சின் கீழ் அந்த படத்தை கொண்டு வர உள்ளதாகவும், கேஜிஎப் 3ம் பாகத்திற்கான தொடக்க காட்சியாக அந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளது.
மேலும், கேஜிஎப் 3ம் பாகத்தின் பிரதான காட்சிகளில் யஷ் மற்றும் அஜித் இணைந்து இருப்பது போல படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தாண்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் கேஜிஎப் படத்திற்கு பிறகு இயக்கிய சலார் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், சலார் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் அஜித் - பிரசாந்த் நீல் இணையும் முதல் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது.