நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜீத்குமார்.. மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு

 
Ajith

மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

‘துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது.

சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜித்குமார், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மதியம் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி என்று தகவல் பரவியதால், இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ajith

இந்த நிலையில், நடிகர் அஜித் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். இதுகுறித்து சுரேஷ் சந்திரா கூறியதாவது, “வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்ற அஜித்குமார், முழு உடல் பரிசோதனை செய்துக் கொண்டார். அப்போது, காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பு வீக்கம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதற்காக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, நேற்று இரவே அவரை சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டனர்.

சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் உள்ளார். ஆனால், மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை. அனைத்து மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று இரவு அல்லது நாளை அஜித்குமார் வீடு திரும்புவார். திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பங்கேற்பார்” என்று தெரிவித்திருந்தார்.

Ajith

இந்நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் அஜித்தை நேற்று பல திரைப்பட இயக்குநர்கள் நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும் அவர்களுடன் நடிகர் அஜித் பேசி மகிழ்ந்ததாக மேலாளர் கூறியிருந்தார்.

From around the web