ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் வாங்கிய நடிகர் அஜித்..? வைரலாகும் போட்டோஸ்!
நடிகர் அஜித்குமார் துபாயில் ரூ 9 கோடி மதிப்புள்ள புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்கிற இரு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில், விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த பின், நடிகர் அஜித்குமார் ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர், இதற்கு முன்பாக ரூ.34 லட்சம் மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் போன்ற 6-க்கும் மேற்பட்ட அதிக மதிப்புமிக்க கார்களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் பைக் ரேசிங் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இதனாலேயே அவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பைக் ரைடிங் சென்று விடுவார். கார் பிரியரான அஜித், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின்போது ஓய்வு நாள்களில் பந்தயக் கார்களை ஓட்டியது குறிப்பிடத்தக்கது