NEET அரசியலுக்கு எதிரா ஒரு படம்.. ‘அஞ்சாமை’ படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு!

 
Anjaamai

சமீபத்தில் வெளியான ‘அஞ்சாமை’ படத்தை பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த கூடிய நல்ல படங்களை கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசு பொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள முதல் படம் என்பதாலோ என்னவோ படம் வெளியான நாளிலிருந்தே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் தமிழ்நாட்டிற்கு  நீட் தேர்வு வேண்டாமென தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Anjaamai

இந்த நிலையில் சமீபத்தில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரவித்துள்ளனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “நீட் தேர்வு கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய, எதார்த்தமான உண்மையான நிகழ்வுகளை கூட்டாமல் குறைக்காமல் சமூகத்தில் நடப்பதை அப்படியே ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் இரண்டு மணி நேரத்தில் காட்டி இருக்கிறார்கள். ஒரு தேர்வு என்பது எந்த அளவு முரட்டுத்தனமாக, சமூக விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய உள்நோக்கம் கொண்டவர்கள் இன்றைக்கு விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருப்பதிலே, எத்தனை சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் நடைமுறை எதார்த்தமாக கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல், தந்தை பெரியாரின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையை அதன் நிர்வாணத்தன்மையில் அப்படியே எடுத்து காட்டி இருக்கிறார்கள்.

Keeramani

சில நேரங்களில் உண்மை கசப்பாக இருக்கும். மற்றவர்களால் செரிமானம் செய்யப்பட முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உண்மை கலப்படமாக இருக்க முடியாது என்பதை ‘அஞ்சாமை’ படம் மூலமாக அஞ்சாமல் செய்திருக்கும் தயாரிப்பாளரின் அஞ்சாமையை முதலில் பாராட்ட வேண்டும். அவர் ஒரு மனோ தத்துவ மருத்துவர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்களையும் நடப்புகளையும் இணைத்து இருக்கிறார். இது வெறும் படம் மட்டுமல்ல.. மாணவர் உலகத்திற்கு மட்டுமல்ல சமூகத்தின் கோணல்களை திருத்தக் கூடிய ஒரு அற்புதமான பாடம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன், “அஞ்சாமை என்கிற படத்தின் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்த பெயர். இன்று நாடு முழுவதும் ஒரு பெரும் விவாதத்தில் இருந்து கொண்டிருப்பது நீட் நுழைவுத் தேர்வு அடுத்ததாக நெட் தேர்வு. எல்லாவற்றையுமே ரத்து பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி எத்தனை பேர் மடிந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிகழ்ந்து கொண்டிருக்கிற சம்பவங்களை, மிக எதார்த்தமான முறையில் படமாக்கி மக்களிடம் காட்டுவதற்கு உள்ள ஒரு துணிச்சலான முயற்சி இது. இந்த படத்தில் அச்சப்படாமல் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் துணிச்சலாக படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இதில் நடித்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுதான் இந்த படத்தின் வெற்றியே” என்று கூறினார்.

Mutharasan

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர் மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர். இதனிடையே “நீட் தேர்வை தடுக்கும் வகையிலும். நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கும் வகையிலும் உள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் ‘அஞ்சாமை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகையை கைது செய்ய வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

From around the web